Sunday 12 February 2012

திரு. அஷ்ரப் சிஹாப்டீன் அவர்களின் சிந்தனையில்  , அழகான தலைப்புடன்.  50 அருமையான கவிகளுடன் எனக்குக்  கிடைத்த ஒரு அரும் பொக்கிஷம் "என்னை தீயில் எறிந்தவள்" .......................கவிகள் எல்லாமே அருமையிலும் அருமை!!  "நச்"என்று  பொறிதட்டும்  ஆர்ப்பாட்டமே இல்லாத எளிய நடைக் கவிகள்.. அநேகமானவைகள் ஒரு பக்க கவிதைகளாக இருந்தாலும் கூட அதன் ஆழம் மனதின் எங்கோ ஒரு மூலையில் பாதிப்பை ஏறபடுத்துவதையே   உணர முடிகிறது ..நான் படித்தவற்றில் எல்லாமே  என்னை அசர வைத்த  கவிகள் தான்.....எதிர்பாராத கவித் தலைப்புகள்... நினைத்துப் பார்க்காத கவியின் கரு.. இவை எல்லாமே " என்னை தீயில் எறிந்தவள் " ஐ  பலமுறை படித்துப பார்க்க தூண்டிய விஷயங்கள்.........

நிமிர்தல்
நாம் புல்லாய்  இருந்து விட்டு போவோம்
மரமாயிருப்பதில்
மகத்துவங்கள் உண்டெனினும்
புல்லாயிருப்பதுவே பொருந்தும் நமக்கு...

மரமாயிருப்பின்
பறவைகள் கூடமைத்துக்  கொள்ளும்
ஆயினும்,
நிழலில் இளைப்பாருவோர் மீது
எச்சமிடும் .

கோடரியுங் கொண்டு கொத்துவர்
வாள் கொண்டரறுப்பர்
பலகைகாய் ..

உயிர் துடிக்கத்
துண்டாக்கி துண்டு துண்டாக்கி
அடுக்கி  வைப்பார்  புழுவரிக்க ..

கட்டிலானால் கணிகையும் படுப்பாள்
யன்னலாகில் சாரல் நனைக்கும்
மனிதர் துப்ப எச்சில் தெறிக்கும்
கதவானால் ..
திறந்தும் மூடியும் வதைப்பார்

பெருங்  காற்றோ புரட்டி விட்டுப் போகும்
வெள்ளமோ இழுத்துத் தள்ளிவிடும்
எங்கோ.......
எல்லாம் முடிந்து விடும்

புல்லாயிருந்தால் மிதி படுவோம்
ஆயின்.......
புல்லாகவே  இருந்துவிட்டுப் போவோம்

மிதி பட மிதி பட
நிமிர முடியுமென்ற
ஒரே ஒரு காரணத்தால் ..............................

நன்றி.... என்னைத் தீயில் எறிந்தவள்..........................